இராமலிங்கவிலாசம் - இராமநாதபுரம்

வரலாற்றுச் செய்திகள்

இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது இராமலிங்க விலாசம் என்னும் எழில் மாளிகை சேதுமன்னர்களில் சிறப்புற்று விளங்கிய கிழவன் சேதுபதியன் (கி.பி 1674-1710) காலத்தில் இம்மாளிகை உருவாயிற்று.

விழாக்காலங்களில் சேதுபதி மன்னர்கள் இம்மாளிகையில் வந்து தங்குவர். இம்மாளிகையின் சுவர்களில் ஓவியக்கலைக்கும், வரலாற்றியலுக்கும் பெருமை சேர்க்கும் அரிய வண்ண ஓவியங்கள் எழிலுறத் தீட்டப்பட்டுள்ளன.

இராமாயணம், பாகவதம், தலப்புராணங்கள், முத்து விஜய ரகுநாத சேதுபதியின் முக்கிய வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.இவ்வோவியங்களின் கீழ் தமிழ், தெலுங்கு மொழிகளில் விளக்கக் குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளன.

 

முன் மண்டபத்தின் சுவர்களில் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் உருவமும், தலைப்புராணக் கதைகளும் ஓவியமாக்கப்பட்டுள்ளன. சேதுபதிக்கும், தஞ்சை மராத்திய மன்னர்க்கும் மூண்ட போர் காட்சிகளும், பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளும் பெயர்களுடன் வரையப்பட்டுள்ளன. சேதுபதி மன்னர் மன்று ஐரோப்பியர்களை வரவேற்பதாக ஒரு காட்சி உள்ளது. ஏசு கழகத்தார் குழு ஒன்றை வரவேற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

பின்புறமுள்ள மண்டபத்தில் பாகவதக்கதைகள் தீட்டப்பட்டுள்ளன. அடுத்து சீதாகல்யாணம் முதலான இராமாயணக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன.

அமைவிடம் : சென்னையிலிருந்து  506 கி.மீ தொலைவில் உள்ளது

வட்டம் : இராமநாதபுரம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 928/தகல்வித் துறை/நாள்/20.05.78