கூவில் உடையார் கல்வெட்டு

வரலாற்றுச் செய்திகள்

சீவலப்பேரி என்ற ஊரின் அருகில் இக்கிராமம் அமைந்துள்ளது. சீவலப்பேரி என்னும் ஏரியின் மறுகால் அருகில் இது அமைந்துள்ளமையால் மறுகால் தலை என்றும் பெயர் பெற்றது. இங்கு சிறு குன்று ஒன்று உள்ளது. இது மறுகால்தலை மலை என்றும் கூவில் உடையார் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

இக்குன்றின் மேல் கூவில் உடைய சாஸ்தா என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற ஐயனார் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

இம்மலையின் தென்பகுதியில் தெற்கு திசையினை நோக்கிய நிலையில் குகை ஒன்று காணப்படுகின்றது. இதில் சமண முனிவர்களுக்கென்று அமைக்கப் பெற்ற கற்படுக்கைகள் காணப்படுகின்றன. இக்கற்படுக்கைகளின் மேற்பகுதி தலையை வைத்து படுப்பதற்கு வசதியாக தலையணை போன்று மேடாக அமைக்கப்பட்டுள்ளது.

குரல் பகுதியில் கால் வைத்துக் கொள்வதற்கு வசதியாக குழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இகடகுகையின் மேற்குப் பகுதியில் ஏழு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்குப் பகுதியில் முழுமை பெறாத சில படுக்கைகள் உள்ளன. மேற்பாறையின் முகப்பில் மழைத் தண்ணீர் படுக்கைக்கு வராத வகையில் ‘காடி வெட்டப்பட்டுள்ளது’. இதன் கூரைப்பகுதியில் இப்படுக்கைகளை உருவாக்கியவரின் பெயர் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டள்ளது.

அத்தமிழ் கல்வெட்டாவது ‘வெண் காசிபன் கொடுபித கல் கஞ்சனம்’ என வருகிறது. வேண் காசிபன் என்பவன் இக்கற்படுக்கைகளைச் செய்து அளித்தான் என்பது இக்கல்வெட்டின் ரூலம் அறியப்படும் செய்தியாகும்.

கிழக்குப் பகுதியில் முடிக்கப்பெறாது காணப்படும் படுக்கைகளின் அருகில் ‘சுவாமி அழகிய அம’ என்ற 18-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காணப்படுகிறது. இதன் ரூலம் சாமி அழகிய அமணர் என்பவர் இங்கு தங்கி இருந்தார் என்று அறிய முடிகிறது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 125 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.

வட்டம் : பாளையங்கோட்டை

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 96/த.வ.ப.துறை/நாள்/29.05.90