சிவன் கோயில் - அரிட்டாப்பட்டி
வரலாற்றுச் செய்திகள்
அரிட்டாப்பட்டி என்னும் சிற்றூரின் மேற்கில் 2 கி.மீ தொலைவில் கழிஞ்சமலை என்னும் பெயரில் சிறிய மலைத்தொடர் ஒன்று உள்ளது. இம்மலையின் பழம்பெயர் திருப்பிணையன் மலை என்பது கல்வெட்டு ஒன்றின் மூலம் அறியப்படுகிறது. இம்மலையின் மேற்குப் பகுதியில் ஓர் அழகிய குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது.
இது சிவபெருமானுக்கு கி.பி எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கோயிலாகும். ஒரு சிறிய கருவறையும், அழகிய முன் மண்டபமும் கொண்டு விளங்குகிறது இக்கோயில். இயற்க்கையான பாறையிலேயே உருவாக்கப்பட்ட லிங்கம் கருவறையில் உள்ளது. மண்டபத்தில் முன் வரிசையில் மட்டும் இரண்டு தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. இக்கோயில் இன்று இவ்வூர் மக்களால் இடைச்சி மண்டபம் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. குடைவரைக் கோயிலின்
வெளிப்புறச்சுவரில் விநாயகர், லகுலீசர் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. முதலில் லகுலீசா சிற்பத்தை முருகன் சிற்பமாகவும் கருதினர். ஆனால் தென்னகத்தில் காணப்படும் ஒரு சில லகுலீசா சிற்பங்களில் இது மிக முக்கியமானது எனத் தற்போது கருதப்படுகிறது.
மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்த இயற்க்கையான குகைத்தளத்தில் சமணர் படுக்கைகள் உள்ளன. இக்குகைத்தளத்தின் நெற்றியில் பிராமிக் கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நெல்வேலியைச் சேர்ந்த சிழிவன் அதினன், வெளியன் என்பவன் இச்சமணர் படுக்கைகளையும் குகையையும் செய்வித்தான் எனக் கல்வெட்டு (நெல்வெளிஇய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபதோன் ) குறிப்பிடுகிறது. அருகில் உள்ள பாறை ஒன்றில் மஹாவீரர் உருவம் ஒன்றும் புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. அதன்கீழ் வட்டெழுத்தால் ஆன கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இக்கல்வெட்டின் மூலம் இம்மலைக்குத் திருப்பிணையன் மலை என்ற பெயர் உள்ளதையும், இச்சிற்பம் அச்சணத்தி முனிவரால் உருவாக்கப்பட்டது என்பதையும் பாதிரிக்குடி என்னும் ஊரார் இப்பள்ளியை பாதுகாத்தனர் என்றும் அறிகிறோம். இக்கல்வெட்டின் காலம் கி.பி 10 ஆம் நூற்றாண்டாகும்.
அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது 20 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : மேலூர்
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 1109/கல்வித் துறை/நாள்/17.06.78.