சிவன் கோயில் - கூரம்

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரில் முதலாம் பரமேசுவரவர்மனால் கிபி 679-ல் எழுப்பிக்கப்பட்ட சிவன் கோயில் “வித்யா வினீத பரமேசுவர கிருஹம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் பல்லவர் காலக் கட்டடக்கலைப் பாணிக்குச் சான்றாகத் திகழ்கிறது. இக்கோயில் தூங்கணை மாடம் வடிவில் கட்டப்பட்டுள்ளது.இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மனால் வெளியிடபபட்ட மிகவும் புகழ் வாய்ந்த கூரம் செப்பேடு தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கோயில் கண்காணிகளாக இரண்டு பிராமணர்கள் கோயிலில் வழிபாடு செய்ய அமர்த்தப்பட்டார்கள் என்பதை இச்செப்பேடு வாயிலாக அறிகிறோம். பாம்பினை கரத்தில் பற்றிய ஊர்த்துவ ஜானு நடனமாடும் கூரம் நடராஜர் புகழ் பெற்றது.

சிவன் கோயிலில் உள்ள ஒன்பது கல்வெட்டுகளில் இரண்டாம் நந்திவர்மன். நிருபத்துங்க வர்மன் மற்றும் முதலாம் ராஜராஜ சோழன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை.

இக்கல்வெட்டுகளில் மூலம் தெய்வங்களுக்கு பூசைகள் நடத்த தானங்கள் அளித்தச்செய்தியைக் அறிகிறோம். மேலும் கோயிலில் உள்ள மண்டபத்தில் மகாபாரதம் படிக்க கொடையளித்த செய்தியையும், சிவன் கோயிலில் உள்ள மண்டபத்தை தினமும் தண்ணீர் விட்டு கழுவுவதற்கும் விளக்கு எரிக்கவும் தானமளித்த செய்தியைக் குறிக்கிறது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிபுரம் அருகில் இஞ்சம்பாக்கம் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : காஞ்சிபுரம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 23/த.வ.ப.துறை/நாள்/12.0.93