சொக்கீஸ்வரர் கோயில் - காஞ்சிபுரம்

வரலாற்றுச் செய்திகள்

காஞ்சி நகரில் காமாட்சி அம்மன் கோயில்  வட கீழக்கு மூலை அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்துக் கோயிலாகும். இதை சொக்கீஸ்வரர் கோயில் என்று அழைக்கின்றனர். மேலும் கௌசிகன் என்பவன் வழிப்பட்டதால் “கௌசிகம்” எனப்பட்ட இத்திருக்கோயில் இறைவன் ஸ்ரீ கௌசிகேசுவரர் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயில் சோழ மன்னர் உத்தமச் சோழனால் கட்டப்பட்டதாகும்.

கி.பி. 985-ல் எடுக்கப்பட்ட இத்திருக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு, இக்கோயிலை தெற்க்கிருந்த நக்கர் கோயில் என்று குறிக்கிறது. இக்கல்வெட்டு கரிகால் சோழ பிள்ளையார் என்று ஒரு கடவுளையும் குறிக்கிறது. இப்பிள்ளையாரின் சிற்ப வடிவினை இக்கோயில் அர்த்த மண்டப தேவ கோட்டத்தில் இன்றும் காணலாம். இப்பிள்ளையார் பூதகணங்களுடன் மூசிக வாகனத்தில் காட்சியளிக்கிறது.

கோயில் ஒரு தளம் கொண்டு அதிட்டாணம் முதல் சிகரம் வரை கற்றளிக் கோயிலாக கட்டப்பட்டுள்ளது . சிகரத்தின் கீழ் கண்டப்பகுதியிலுள்ள வேதிப்பட்டையில்  நந்தி சிலைகள் நான்கு திக்குகளில் அமைந்துள்ளது.  இக்கோயில் கருவறை. அர்த்தமண்டபம். முகமண்டபம்  ஆகிய பகுதிகளைக் கொண்டு எளிமையாக எடுக்கப்பட்டுள்ளது. 

அமைவிடம் : சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் உள்ளது.

வட்டம் : காஞ்சிபுரம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 23/த.வ.ப.துறை/நாள்/12.02.93