டேனிஷ்கோட்டை

வரலாற்றுச் செய்திகள்

பண்டைய நாளில் தரங்கம்பாடி ஒரு குறிப்பிடத்தக்க துறைமுகப் பட்டினமாக இருந்துள்ளது. சங்க இலக்கியங்களான அகநாநூறு, புறநாநூறு போன்றவை இத்துறைமுகத்தைப் பற்றி பேசுகின்றன. வங்கக் கடற்கரையில் மாசிலாமணிநாதர் என்ற சிவன் கோயில் ஒன்று காணப்படுகின்றது.

கி.பி 1305 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டில் இந்த ஊர் சடங்கன்பாடியான குலசேகர பட்டணம் என்று வருகின்றது. பாண்டிய மன்னனின் இக்கல்வெட்டால் தரங்கம்பாடிக்கு “சடங்கன் பாடி” என்று பெயர் இருந்தது என்பது தெரிய வருகின்றது.

தரங்கம்பாடி டேனிஸ் கப்பற்படைத் தளபதி ஓவ்ஜெட்டி என்பவர் (Ove Gedde) தஞ்சை மன்னன் இரகுநாத நாயக்கனின் அனுமதி பெற்று கி.பி 1620-ல் தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையை நிறுவினார்.

(The Dans borc Built by Ove Gedde Commander in the Royal Danish Navy Roc 1620)  கி.பி 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸீகன்பால்கு - ஐயர் என்ற டேளிஸ் பாதிரியார் தரங்கம்பாடியில் தங்கித் தமிழுக்கு தொண்டாற்றினார். ஸீகன்பால்கு ஐயர் தம் ஜெர்மன் நன்பர்களின் உதவியால், தமிழ் அச்செழுத்துகளையும் அச்சுப் பொறியையும் பெற்று கி.பி 1713 ஆம் ஆண்டில் தரங்கம்பாடி அச்சகம் ஒன்றை நிறுவினார். அவ்வச்சகத்தின் மூலம் ஏராளமான தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டன. மேலும் இந்தியாவிலேயே முதன் முதலில் காகிதத் தொழிற்சாலை தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இக்கோட்டை இரண்டு நிலையாக உள்ளது கீழ் பகுதியில் மதில் சுவரும் அதனைச் சார்ந்த அறைகளும் அடங்கும். மேல் நிலையில் கவர்னர் தங்கும் பகுதியும், மதப்பாதிரியார்கள் தங்கும் பகுதிகளும் அடங்கும். மதில் சுவரில் உள்ள பகுதிகள் கிடங்குகளாகவும், வீராகள் தங்கும் பகுதிகளாகவும், சிறையாகவும் உபயோகப்படுத்தப்பட்டன.

இக்கோட்டை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் 1977-ல் இருந்து பததுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. தொல்லலியல் துறையின் அருங்காட்சியகம் ஒன்றும் இக்கோட்டையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிற்கும் டென்மார்க் நாட்டிற்கும் உள்ள தொடர்பைப் பற்றிய விபரங்கள் இப்பகுதியில் கிடைக்கின்ற தொல்பொருட்கள் ஆகியன பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமைவிடம் : சென்னையிலிருந்து 304  கி.மீ தொலைவில் நாகப்பட்டியனம் உள்ளது.  நாகப்பட்டினத்திலிருந்து  தரங்கம்பாடி  சுமார் 34 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : தரங்கம்பாடி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 2610/த.கல்வித் துறை/நாள்/06.12.80