டேனிஷ் கோட்டை தள அருங்காட்சியகம் - தரங்கம்பாடி

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 A.M. to 05.00 P.M.

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

: Thiru P.Baskar, Curator- I/C

தொலைபேசி

: ------------

 

தரங்கம்பாடியின் வரலாறு கி.பி முதல் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது. பண்டைய சங்க இலக்கியங்களான புறநானூறு, நற்றிணை மற்றும் அகநானூறு ஆகியவற்றில் பொறையாறு, முன்துறை என்ற ஒரு துறைமுக நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதி வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகத் திகழ்ந்துள்ளது.

தரங்கம்பாடி பற்றி கிடைக்கும் பழமையான சான்றான கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றில், குலசேகரப் பட்டினமான சடங்கன்பாடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துறைமுகப் பட்டினத்திற்கு பல வெளிநாட்டு வணிகர்கள் வந்து வாணிகம் செய்துள்ளனர். இத்துறைமுகம் அக்காலத்தில் உப்புநாறு முகத்துவாரத்தில் அமைந்திருத்ததால் உள்நாட்டு வணிகத்திற்கு ஏதுவாக இருந்துள்ளது.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் நாங்கூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதியில் உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஆங்கிலேயர்கள். பிரெச்சு, டச்சு மற்றும் டென்மார்க் நாட்டவர்கள் தங்களது கிழக்கித்திய கம்பெனிகளை நிறுவி அதன் மூலம் இப்பகுதியில் வாணிகத் தொடர்பினை மேற்கொண்டனர். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் நாகப்பட்டினத்தில் தங்கியிருந்ததோடு தொழிற்கூடம் மூலம் தரங்கம்பாடி பகுதியிலும் இவர்களின் வாணிகம் நடைபெற்றுள்ளது.

டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேனில் கி.பி. 1616-ல் தொடங்கப்பட்டது. டென்மார்க் நாட்டு அரசர், டேனிஷ் அட்மைரல் ஒவ்கெட்டியைத் தனது பிரதிநிதியாக இரண்டு கப்பல்களுடன் ஹாலந்து நாட்டு கப்பல் தலைவனான ரெய்லெட் கிரேப் என்பவனின் உதவியுடன் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ரெய்லெட் கிரேப் உதவியுடன் அப்போதைய தஞ்சை நாயக்க அரசரான இரகுநாத நாயக்கருக்கும், டேனிஷ் அரசருக்கும் இடையில் இணக்கமான நட்பு ஏற்பட்டது. அப்பொழுது ஓலை வடிவிலான, தங்கச் சுவடியில் நட்புமுறி ஒன்று இரு அரசர்களுக்கும் இடையில் கி.பி. 1620-ல் கையெழுத்தானது.

தற்போது இந்த ஆவணம் டென்மார்க் கோபன்ஹேகனில் உள்ள ஆவணக் காப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலமைந்த இந்த ஆவணத்தில், அரசன் இரகுநாத நாயக்கர் தெலுங்கில் கையொப்பம் இட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டைக்குள் இவ்வகழ்வைப்பகம் அமைந்துள்ளது.

காட்சிப் பொருட்கள்:

பீங்கான் பொருட்கள், டென்மார்க் நாட்டுக் கையெழுத்துப் பிரதிகள், கண்ணாடிப் பொருட்கள், சீனநாட்டுத் தேநீர்ச் சாடிகள், மாக்கல் விளக்குகள், அலங்கரிக்கப்பட்ட சுடுமண் பொருட்கள், விளக்குகள், கற்சிற்பங்கள், கத்தி, குறுவாள், ஈட்டி போன்ற இரும்பினால் ஆனப் பொருட்களும், சுதையினால் ஆன உருவங்கள், பெருங்கற்கால ஈமச் சின்னங்கள், மரத்தினால் ஆன பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.