தஞ்சாவூர் அரண்மனை - தஞ்சாவூர்
வரலாற்றுச் செய்திகள்
தஞ்சாவூரில் சின்னக்கோட்டை, பெரியக்கோட்டை என்று இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள் உள்ளன. இதில் ஆயுத கோபுரம், சர்ஜா மாடி, மராட்டியர் தர்பார் மண்டபம் மற்றும் மணிகோபுரம் ஆகியவை பெரியக் கோட்டையில் அடங்கும்.
ஆயுதக்கோபுரம்
தஞ்சைக்கு வருகை புரிபவர்களின் கருத்தைக் கவருவதில், தஞ்சை பெரிய கோயிலின் விமானத்திற்கு இணையாகத் திகழ்வது அரண்மனை வளாகத்தில் உள்ள ஆயுதக்கேபுரமாகும். இது 190 அடி உயரத்தில், 8 அடுக்குகளைக் கொண்டதாக எடுப்பாகக் காட்சி தருகிறது. இதன் உச்சியை அடைய அடிப்பகுதியில் படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை மராட்டியர் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோபுரம் கி.பி 1855 வரை மராட்டிய அரசர்கள்,
எதிரிப்படை யாதேனும் வருகிறதா என்று கண்காணிக்கும் கோபுரமாகவும், ஆயுதங்கள் சேர்த்து வைக்கும் இடமாகவும் பயன் படுத்தப்பட்டது.இதனில் பலவிதமான போர்க் கலன்கள் இருந்தன. ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயுதங்களும் இவற்றில் அடங்கும். இவ்வரண்மனை 1855-ல் ஆங்கிலேயர்கள் வசம் சென்றதும் இவ்வாயுதங்கள் அணைத்தும் திருச்சிராப்பள்ளிக்கு 1863-ல் கொண்டு செல்லப்பட்டது.
சர்ஜாமாடி
மராட்டியர் கால அரண்மனையில் சதாமாடி என்று அழைக்கப்படும் பகுதியும் ஒன்றாகும். இது ஏழடுக்குக் கட்டடம் என்று அழைங்கப்படுகிறது.தற்போது ஆறுடுக்குகள் மட்டும் காணப்படுகின்றன. சாலையில் செல்லும் எவருடைய கவனத்தையும் ஈர்க்கக் கூடியதாகும். இதனில் பல அரசு அலுவலகங்கள் முன்பு இயங்கி வந்தன. தற்பொழுது அவை அகற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் கிபி 1824-ல் கட்டப்பட்டது என்று இங்குள்ள மராட்டிய கல்வெட்டு கூறுகின்றது.
மராட்டியர் தர்பார் மண்டபம்
மராட்டியர் தர்பார் மண்டபம், அரண்மனை வளாகத்தில் நாயக்கர் மற்றும் மராட்டியர் கால மிகச் சிறந்த ஓவியங்கள் மற்றும் சுதையுருவங்கள் நிறைந்தப் பகுதியாகும். சுரஸ்வதி மஹால் நூல் நிலையத்தின் கிழக்குப் பகுதியில், ஒரு திறந்த வெளி முற்றத்துடன் அமைந்துள்ளது.
மண்டபத்தின் முன் பகுதியில் மரத்தூண்களுடன் கூடிய தாழ்வாரம் உள்ளது. சில படிகள் மீது ஏறிச் சென்றால் தர்பார் மண்டபத்தை அடையலாம். இதனில் மராட்டியமன்னர்கள் சிவாஜி முதல் பல மன்னர்களின் உருவ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மண்டபத்தில் அமையதுள்ள என்பட்டை வடிவத்தூண்கள் மற்றும் வளைவுகள், சுவர்கள் ஆகியவை, விடையூர்தியில் சிவபெருமான், கருடன் மீது திருமால், இந்திரன் இந்திராணிட போன்ற பல சுதை உருவங்களைக் கொண்டு விளங்குகின்றன.
மல்யுத்தம் போன்ற காட்சிகளும் சுதையுருவங்களாக உள்ளன. தர்பார் மண்டபத்தின் மையப்பகுதியில் மராட்டிய மன்னர் சிவாஜியின் ஓவியமும், அருகில் அமைச்சர் மற்றும் தளவாய் ஆகியோரின் ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. இந்த தர்பார் மண்டபத்தின் எதிரில் அமைந்த திறந்தவெளி முற்றத்தில் மல்யுத்தம், கிடாய்ச் சண்டை போன்ற வீர விளையாட்டுக்ள நிகழ்ந்தன என்றும் சொல்வர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசுத் தொல்லியல் துறையால் இங்குள்ள ஓவியங்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டபோது, தற்போது காணப்பெறும் ஓவியத்துக்கு கீழ் நாயக்கர் கால ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மணிக்கோபுரம்
ஆயுதக் கோபுரத்திற்குச் சற்று வடமேற்கில் அமையதுள்ள இக்கோபுரம், ‘மணிமண்டபம்’, ‘தொள்ளைக் காது மண்டபம்’ என்று பொதுமக்களால் அழைக்கப்படுகிறது. தஞ்சை நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கர் இதன் உச்சிக்கு சென்று திருவரங்கம் நோக்கி வழிபடுவார் என்று வழிவழிச் செய்தி கூறுகிறது.
இன்று ஏழு தளங்களுடன் உள்ள இக்கோபுரம் மேலும் சில தளங்களை உடையதாகக் காட்சியளித்தது என்றும், இடி, மழை, மின்னல் காரணமாக அவை சிதையதுவிட்டன என்றும் கூறுவர். மராட்டியர் காலத்தில் ஒரு புதுமையான காலம் காட்டி (கடிகாரம்) இங்கு இருந்தது என்றும் அதில் ஒரு குரங்குப் பொம்மை மணி அடிப்பது போன்று இருக்கும் என்றும் சீவம் என்ற ஆய்வாளரின் குறிப்புக் கூறுகிறது. இக்கோபுரம் செஞ்சி நாயக்கர் கலைப்பாணியில் உள்ளது. இதன் உச்சியை அடைய நூற்றுக்கும் மேற்பட்ட படிகள் உப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோபுரத்தில், கீழ்தளத்தையொட்டி கூடுதலாகப் பிற்காலங்களில் சேர்க்கப்பட்ட சுவர்கள் அகற்றப்பட்டன. அடித்தளத்தில் நான்கு மீட்டர் உயரத்திற்குச் சேர்ந்திருந்த மண்ணும், குப்பையும் வெளியேற்றப்பட்டன. அவ்வாறு அகற்றும் போது பீங்கான் பாணை ஓடுகளும், சிறு பொம்மைகளும் கிடைத்துள்ளன. இத்தளத்தில் ஒரு சிறு கோயிலும், சிறிய நீராழி போன்ற அமைப்பும், சுவர்களோடு சேர்ந்த நிலையில் சில அரச - அரசியர் உருவங்களும் அமைக்கப் பெற்றிருப்பது அறிப்பட்டது.
அமைவிடம் : சென்னையிலிருயது 342 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சாவூரில் உள்ளது.
வட்டம் : தஞ்சாவூர்
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 367/த.வ.ப. துறை/நாள்/15.12.88