தமிழ் கல்வெட்டுகள் - வேலாயுதம்பாளையம்

வரலாற்றுச் செய்திகள்

புகளூர் என்னும் இவ்வூர் வேலாயுதம்பாளையம் என்றும் அழைக்கப்பெருகின்றது. புகளூருக்கு அருகிலுள்ள, ஆர்நாட்டார்மலை என்ற குன்றில் இயற்கையாக அமைந்த பண்டைய குகைத்தளங்கள் இருக்கின்றன.

அவற்றில் சமனப் பெரியார்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன. தமிழக வரலாற்றுக்கு இன்றியமையாத மிகவும் தொன்மையான கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இக்கல்வெட்டுகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை உள்ளவையாகும்.

இக்கல்வெட்டுகள் சங்ககால சேரமன்னர்ககள் மூவரைக் குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களான பதிற்றுப் பத்து, ஏழு, எட்டு, ஒன்பதாம் பத்துக்களின் பாட்டின் தலைவர்களான “செல்வக் கடுங்கோ வாழியாதன்” பெருஞ்சேரன் இரும்பொறை, இளஞ்சேரன் இரும்பொறை ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.

இம்மூவரும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வெட்டுகளில் கோஆதன் செல்லிரும் பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்று வழிமுறைப்படி குறிக்கப்படுகின்றனர். சங்க காலத்தில் ஓர் அரச குலத்தின் மூன்று தலைமுறைகளைக் குறிக்கும் ஒரே கல்வெட்டு இதுவே ஆகும்.

சேரன் இளங்கடுங்கோ தான் இளவரசனாக பொறுப்பேற்ற பிறகு இம்மலையில் வாழ்ந்த சமணத் துறவியான செங்காயன் என்பவருக்கு பாழி (படுக்கை) அமைத்துத் தந்ததை இக்கல்வெட்டுகள் தெரிகின்றன. மேலும் மற்ற கல்வெட்டுகள் இங்கு வசித்த சமணத் துறவியர் பலரது பெயர்களையும், அவர்களுடைய படுக்கைகள் செய்து கொடுத்தவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றது. அவற்றுள் பிட்டன், கொற்றன், கீரன், ஓரி போன்ற சங்கபெயர்களும், உப்பு வணிகன், பொன்வணிகன் மற்றும் அறுவை வணிகன் ஆகிய வணிகர்களின் பெயர்களும் குறிக்கப்பெற்றுள்ளது சிறப்பாகும்.

அமைவிடம் :சென்னையிலிருந்து 390 கி.மீ தொலைவில் கரூர் உள்ளது.  கரூர் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் புகழூர் உள்ளது.

வட்டம் : லால்குடி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 1109/கல்வித் துறை/நாள்/17.06.78