பூம்புகார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் காவேரி நதி கடலோடு சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது பூம்புகார். இவ்வூர் சங்க காலத்தில், சோழர்களின் ஒரு முக்கிய துறைமுகப்பட்டினமாகவும், இரண்டாம் தலைநகரமாகவும் திகழ்ந்துள்ளது.

 

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, கிழார்வேளி மற்றும் தர்மகுளம் பகுதியில் அகழாய்வு மேற்கொண்டு அரிய தொல்பொருட்களை வெளிக் கொணர்ந்துள்ளது.

 

கிழார்வெளி அகழாய்வில் சுமார் 20 செ.மீ. ஆழத்தில், இரண்டு செங்கற்சுவர்கள் வடகிழக்கு, தென்மேற்குத் திசையில் அமைந்திருந்தது வெளிப்படுத்தப்பட்டது. செங்கற்களை இணைக்க மென்மையான களிமண் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேடையுடன் கூடிய இச்சுவர்கள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது.இவ்விடைவெளி ஆற்றுநீர் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம். பனைமரத்துண்டு இரண்டும், இலுப்பை மரத்துண்டு இரண்டும் நான்கு மூலைகளில் செங்குத்தாக நடப்பட்டுள்ளது. இக்கட்டட அமைப்பு படகுத்துறையாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.


கோவா தேதிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, 1996-97 ஆம் ஆண்டு இக்கடற்கரைப் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் ஈயக்கட்டிகள் சில கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.