வழிபோக்கர் மண்டபம் - தாங்கி
வரலாற்றுச் செய்திகள்
இவ்வழிப்போக்கர் மண்டபம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இம்மண்டபம் இரண்டு பகுதிகளாகக் காணப்படுகிறது. மண்டபத்தின் பின்புறச் சுவரில் நடுவில் அனுமன் உருவமும், சுவரின் மேற்பகுதியில் விதானத்தையொட்டி கஜலட்சுமி உருவமும் உள்ளன.
மண்டப ஊட்புற விதானத்தின் நடுப்பகுதியில் நன்கு செதுக்கப்பட்டுள்ள அழகிய கிளிகளின் உருவங்கள் மலரை கொத்துவது போன்றுப் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தை, பல வரிசைகளில் தூண்கள் அலங்கரிக்கின்றன. இத்தூண்களில் திருமாலின் அவதாரங்களும், சிவபெருமானின் பல்வேறு வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
உட்புற மண்டபத்தின் மேற்குச் சுவரில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு இந்த வழிப்போக்கர் மண்டபம் கி.பி. 1777-ல் தித்தர் செட்டி, முக்கர் செட்டி என்பவர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.
அமைவிடம் : சென்னையிலிருந்து வாலாஜாபத் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 70 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : செங்கல்பட்டு
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 83/த.வ.ப.துறை/நாள்/23.03.86