விட்டலர் கோயில் - விட்டலாபுரம்

வரலாற்றுச் செய்திகள்

விட்டலர் கோயில் - விட்டலாபுரம் திருமாலின் அவதாரங்களில் கிருஷ்ணாவதாரம் ஒன்றாகும். கிருஷ்ணனின் மற்றொரு வடிவம் விட்டலர் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. விஜயநகர மன்னர்களின் குலதெய்வமாக விட்டலர் கருதப்படுகிறார். இக்கோயிலில் உள்ள கல்வெட்டு இவ்வூரை விட்டலாபுரம் என அழைக்கிறது. இவ்வூரும் கோயிலும் கிருஷ்ணதேவராயரால் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது எனக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

இக்கோயில், கருவறை, அர்த்த மண்டபம், மஹாமணடபம், முகமண்டபம், திருச்சுற்று மதில், கோபுரவாயில், தாயார் சன்னதி மற்றும் பரிவார ஆலயங்கள் ஆகிய பல்வேறு பகுதிகளுடன் பாங்குற அமைந்துள்ளது. இவை விஜயநகரக் கால கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. கருவரையில் விட்டலரின் திருமேனி நின்ற கோலத்தில் இடது கையில் சங்கு ஏந்தியும், வலது கையில் அபய முத்திரைத் தாங்கியும் காட்சியளிக்கின்றது.

இக்கோயில் அதிஷ்டானம் முதல் பிரஸ்தரம் வரை கருங்கல் திருப்பணியாகவும் அதன் மேலுள்ள விமானத்தளம் சுதையாலும் எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயில் முகமண்டபம் எடுப்பான தோற்றமுடையது. இக்கோயிலில் மொத்தம் நான்கு தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயில், சதாசிவராயர் காலத்தில் கி.கி. 1558-ல் திருப்பணி செய்து தேர் உற்சவம் நடைபெற்றதை அறிகிறோம்.

இக்கோயிலில் உள்ள மற்றொறு கல்வெட்டு மாவலிபுரத்தை (மகாபலிபுரம்) சேர்ந்த இலட்சுமிநாதன் என்பவர் அளித்த கொடையைப் பற்றி குறிப்பிடுகிறது. விட்டலர் பெயரில் அழைக்கப்பட்டு வரும் இக்கோயில் இப்பகுதியில் மிகவும் புகழ் பெற்றது. கர்நாடக மாநிலத்தில் விஜயநகர மன்னர்களின் தலைநகரான ஹம்பியில் விட்டலருக்காக தனிக் கோயில் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கோயிலில் விட்டலருக்கான தனி சன்னதியைக் காணலாம். விட்டலருக்காக எடுக்கப்பட்ட தனிக் கோயில் தமிழகத்தில் இது ஒன்றேயாகும்.

அமைவிடம் : சென்னை - புதுபட்டிணம் சாலையில் சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : செங்கல்பட்டு

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண்.1224/கல்வி/நாள்/14.06.82