ஸ்ரீ ருத்ரபதி கோயில் - கீழக்கடம்பூர்

கடம்பூர் என்ற ஊர் கல்வெட்டில் உத்தம சோழ சதுர்வேதிமங்கலம் என குறிக்கப்பட்டுள்ளது. முனிவர்கள், தேவர்கள் வழிபட்டதாகக் கூறும் கல்வெட்டுகளும் உள்ளன. விருதராஜ பயங்கரவளநாட்டு மேற்காநாட்டுக் கடம்பூர் என்றும் கூறப்படுகிறது.

இவ்வூரில் உள்ள பழமையான சிவன் கோயில் ஸ்ரீ ருத்ரபதி கோயில் என வழங்கப்படுகிறது. கருவறை, அர்த்தமண்டபம், மஹாமண்டபம் ஆகிய பகுதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. கோயில் அதிட்டானத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிலரின் பெயர்கள் கி.பி 12 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் பொறிக்கப்பட்டுள்ளன. நாயன்மார் பெயர்களுடன் இறை உருவங்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.

ஒரே ஒரு நாயன்மார் சிலை கூட தற்போது இல்லை. இறை உருவங்களில் சில காணப்படவில்லை. எனினும், கோட்டங்களில் அர்த்தநாரி, தட்சிணாரூர்த்தி, லிங்க புரான தேவர், சந்தியா நிருத்த தேவர் சிற்பங்கள் உள்ளன. பெயர் பொறிக்கப்பட்ட நாயன்மார் மற்றும் கடவுள் உருவங்கள் 1. குங்கியார் 2. ஆரவாமுடையாண்டான் 3. மாநக்கஞ்சாரர் 4. ஆநாயாண்டார் 5. உலகாண்டரமூர்த்தி 6. முருகாண்டார் 7. அர்த்தநாரி 8. திருநாளைப்போவார் 9. திருக்குறிப்புத்தொண்டர் 10. தண்டிப்பெருமாள் 11. நபுக்க தேவர் 12   13. போயர் 14. நீலந்காண்டார் 15. தேவேந்திரர் 16. ஆணைஉரித்ததேவர் 17. லிங்கம் புராண தேவர் 18.புதன் 19. சந்தியா நிருத்த தேவர் 20. திருக்கண்ணப்பர் 21.கால தேவர் 22. இரதசக்கரவர்த்தி.

இரண்டாம் இராசராசன் தாராசுரத்தில் நாயன்மார்களுக்குப் பெயர்களுடன் சிற்பங்கள் எடுப்பித்துள்ளான்.

இச்சிற்பங்களுக்கும் முற்பட்டதாகக் கீழக்கடம்பூர் நாயன்மார்கள் இருக்க வேண்டும். நாயன்மார்களின் வரலாறுகள் சிற்பவடிவம் பெற்றுத்திகழும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். காரைக்கால் அம்மையார் தலைக்கீழாகக் கயிலைக்கு செல்லும் சிற்பமும், கண்ணப்ப நாயனார் சிற்பமும், சண்டிகேசுவரர் சிற்பமும், தாடகை என்ற பெண்ணடியார் சிவனை வழிபடும் சிற்பமும் குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்திரன் இக்கோயிலுக்கு வந்து கோடி லிங்கங்களை பிரதிட்டை செய்து ருத்ரகோடீஸ்வரர் என்ற இளங்கோயிலை எழுப்பி வழிபட்டுள்ளான். எனவே, கீழைக்கடம்பூர் கோயிலை இளங்கோயில் என்றும் இறைவனை ஸ்ரீ ருத்ர கோடீஸ்வரர் என்றும் அழைத்துள்ளனர். நாயன்மாரால் பாடல் பெற்ற கோயில் மேலைக்கடம்பூரில் உள்ளது. அப்பர் பெருமான் இக்கோயிலை கரக்கோயில் என்றும், இறைவனை அமிர்தகடேஸ்வரர் என்றும் அழைத்துள்ளார்.

ஒவ்வொரு யுகத்திலும் யார் யார் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர் என்ற விபரம் அமிர்தகடேஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் உள்ளன. வடமொழி நூல்களில் கூறப்படும் விஜயம் கரக்கோயிலே ஆகும்.

அமைவிடம் :  சென்னையிலிருந்து --கி.மீ தொலைவில் உள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் சிதம்பரம் வட்டத்தில் உள்ளது.

வட்டம் : சிதம்பரம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 23/த.வ.ப.துறை/நாள்/12.02.93