கல்வெட்டியல்
கற்பாறைகள், தூண்கள், கோயிற் சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள் மீதான எழுத்துப் பதிவுகள் பற்றிய ஆய்வு கல்வெட்டியல் எனப்படுகிறது. இப்பதிவு உள்ளத்தை வியக்க வைப்பதாகவும், தகவல் பொருந்தியதாகவும் விளங்குகிறது. இந்த எழுத்துக் கலையானது விலங்கிலிருந்து மனிதனை உயர்ந்தவனாக்கிய அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகவும், ஒருதலை முறையில் நிகழ்ந்த நிகழ்வுகளை வரலாறாக மாற்றவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகவும் விளங்குகிறது.
பண்டைய நாகரீகங்களின் வரலாறு, பண்பாடு முதலியவற்றை முழுமையாக வடிவமைத்து அறிந்து கொள்ள உதவும் முக்கியமான சான்றாகக் கல்வெட்டியல் விளங்குகின்றது. நீதி இயல், சமுதாயப் பண்பாட்டியல், இலக்கியம், தொல்லியல் ஆகியவற்றின் வரலாற்றுத் தொன்மையை நிலைநிறுத்த முதன்மை ஆவணச் சான்றாகக் கல்வெட்டியல் விளங்குகின்றது.
இந்தியக் கல்வெட்டுகள் தொடர்பான 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழகக் கல்வெட்டுகள் இந்தியக் கல்வெட்டுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. கல்வெட்டுகளின் எண்ணிக்கை, செப்பேடுகளின் எண்ணிக்கை ஆகிய எல்லா பிரிவுகளிலும் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் தமிழகமே முதலிடம் வகிக்கிறது.
இந்த ஆய்வு முடிவின் மூலம் இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும்பகுதிக் கல்வெட்டுகள் தமிழகத்தில் தான் உள்ளன என்பது தெளிவாகக் தெரிகிறது. மொழிவாரியாகப் பார்க்கும் போது தமிழ்க் கல்வெட்டுகளே எண்ணிக்கையில் அதிகமுடையனவாகத் திகழ்வதால் முதலிடம் வகிக்கின்றன.
தமிழ்க் கல்வெட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20,000 ஆகும். அதனை அடுத்து கன்னடம் 10,600, சமஸ்கிருதம் 7,500, தெலுங்கு 4,500 என இடம் பெறுகின்றன. தமிழ்க் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைத்துள்ளன. (ளுடிரசஉந : துடிரசயேட டிக வாந நுயீபைசயயீhiஉயட ளுடிஉநைவல டிக ஐனேயை, ஏடிட-19: 1993)
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டுகளுக்கென்று தனிப்பிரிவு 1996-ல் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய பணி தமிழகத்தில் கோயிற் சுவர்களிலும், கற்தூண்களிலும், கற்பலகைகளிலும், குகைத்தளங்களிலும், செப்பேடுகளிலும் மற்றும் பிறவற்றிலும் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து, படித்து மற்றும் தற்கால தமிழ் எழுத்தில் பதிப்பிப்பது ஆகும்.
இதுவரை 24,771 கல்வெட்டுகள் தாள்களில் மைப்படிகளாக படியெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுப்படிகள் கல்வெட்டுப் பிரிவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இத்துறையில் 1973-74 ஆம் ஆண்டு முதல் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் ஒன்று நடந்து வருகிறது. கல்வெட்டியல் மற்றும் தொல்லியலில் ஓராண்டு பட்டயக் கல்வி வகுப்பு இதனில் நடத்தப்படுகிறது. 8 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் திங்கள்தோறும் ரூ. 4,000/- உதவித் தொகை நல்கப்படுகிறது.
தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் முதுகலை பட்டம் இந்நிறுவனத்தில் சேருவதற்கான கல்வித் தகுதியாகும். இப்பயிற்சியின் இறுதியில் இரண்டு தாள்கள் எழுத்துத் தேர்வுகளாகவும் இரண்டு தாள்கள் செயல்முறை தேர்வுகளாகவும் நடத்தப்படுகின்றன.