அளவு கோல்கள்

நிலக் கொடைகளைக் குறிப்பிடும் தமிழ்க் கல்வெட்டுகள் பல இடங்களில் நிலங்களின் அளவுகளைப் பற்றிக் குறிப்பிடும் போது நில அளவுக் கோல்களைக் குறிப்பிடுகின்றன. இவ்வளவு கோல்கள் பொதுவாக மனிதனின் கால் அளவு (அடி) கையளவு (சாண், முழம்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வளவு கோல்களின் நீளம் பதினாறு சாண்கோல், பன்னிரு அடிக் கோல் என்று சாண், அடி எண்ணிக்கைகளின் அடிப்படையில் உள்ளன. சாண், அடி தவிர அளவு குறிப்பிடாமல் தெய்வப் பெயர், அரசன் பெயர், ஊர்ப் பெயர் ஆகிய பெயர்களிலும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டள்ளன.

எடுத்துக்காட்டாக, சிற்றியாற்றூர் கோல், ராஜராஜன் கோல், ராஜ விபாடன் கோல், கண்டார் கண்டன் கோல், இவ்வூர் அளந்த கோல், மாளிகைக் கோல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவ்வளவு கோல்களின் நீளத்தில் இடத்திற்கு இடம் மாறுபடக் கூடியவை என்பதால் அவற்றின் அளவுகள் கோயில் சுவர்களில் காட்டப்பட்டுக் கிடைக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட இடைவெளிகளில் குறிகள் இடப்பட்டு 1/2, 1/4, 1/8 ஆகிய கோலின் அளவுகள் காட்டப்பட்டுள்ளன. இக்கோல்களால் அளக்கப்படும் ஒரு சதுரம், குழி எனப்பட்டது. நில அளவில் சிறிய அளவு குழியாகும். குழியின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப வேலி, படாகம், பட்டி ஆகிய அளவுகள் இருந்தன.

'கண்டார் கண்டன் கோல்’ என்ற பெயருடைய நில அளவின் ஒரு பகுதி வரதராஜப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு

‘தச்ச முழம்’ வரதராஜப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு

‘இது மடி அளவத்து முழம்’ என்றுள்ள துணி அளவு முழம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, திருமழபாடி, பெரம்பலூர் மாவட்டம்

மற்றொரு நீட்டல் அளவு முழம் என்பதாகும். விரல் துணியிலிருந்து முழங்கை வரையுள்ள நீளமாகக் கருதப்படுவது, கட்டடப் பகுதிகளை அளக்கவும் துணி அளக்கவும் இந்த ழுழ அளவு பின்பற்றப்பட்டது. கட்டடக் கலைஞர்களின் முழம்  ‘தச்ச முழம்’ என்ற பெயருடன் இருந்தது. இம்முழ அளவுகள் சில இடங்களில் கோயிற் சுவர்களில் காட்டப்பட்டுள்ளன.