கன்னட எழுத்துக் கல்வெட்டுகள்

கன்னட எழுத்து கி.பி 7 ஆம் நூற்றாண்டளவில் பிராமியிலிருந்து பரிணமித்தது. சாளுக்கியர் மற்றும் இராஷ்டிரகூடர் கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரையில் இதனை பெருவழக்கிற்குக் கொண்டு வர காரணமாயினர். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சாளுக்கிய விக்ககிரமாதித்தனின் கல்வெட்டு கன்னட எழுத்தில் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் தர்மபுரிப் பகுதியில் இருந்த சிற்றசர்களான நுளம்பர்கள் கன்னடத்தை அரசு மொழியாகக் கொண்டிருந்ததால் கன்னட எழுத்தில் கல்வெட்டுகள் பொறித்தனர். இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் சோழர்களை வென்று ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன்’ என்ற பெயருடையவன்.

விழுப்புரம் மாவட்டம் ஒரத்தியில் இவனது கல்வெட்டு தமிழ் மற்றும் கன்னடத்தில் இருமொழி இரு எழுத்துக் கல்வெட்டாக உள்ளது. இருக்குவேளிரின் தலைமையிடமான புதுக்கோட்டை மாவட்டக் கொடும்பாளூரில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக் கன்னடக் கல்வெட்டுள்ளது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கர்நாடகம் ஒட்டிய தமிழ்நாட்டுப் பகுதிகளில் கன்னடக் கல்வெட்டுகளைக் காண்கின்றோம்.

நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம் என்ற இடத்தில் உள்ள நடுகல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக் கன்னடக் கல்வெட்டினைக் கொண்டுள்ளது. பவானிசாகர் நீர்தேக்கத்தில் மூழ்கியுள்ள சிவன் கோயிலைக் குறிக்கும் கன்னடக் கல்வெட்டு இன்று தனாயக்கன் கோட்டை (நீலகிரி சதரன் கோட்டை) என்றழைக்கப்படுமிடத்தில் உள்ளது. இது கி.பி 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் வல்லாளனுடைய கல்வெட்டாகும்.

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலந்தூரில் உள்ள சமணப் பள்ளியில் கன்னடக் கல்வெட்டுள்ளது. செப்பேடுகள் சில கன்னட எழுத்தில் கிடைத்துள்ளன. எனினும் அவை கி.பி. 17-18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிற்காலச் செப்பேடுகளாகும். இதற்கு காரமடைச் செப்பேட்டினை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

கன்னட எழுத்தில் உள்ள இரண்டு நுளம்பர் கல்வெட்டு, கி.பி 9-10 ஆம் நூற்றாண்டு, கோட்டைக் கோயில் தருமபுரி, மேல் பகுதியில் மகேந்திர ராஜாதி நுளம்பர் கல்வெட்டும் கீழ் பகுதியில் அய்யப்ப தேவன் கல்வெட்டும் உள்ளன. (நன்றி எபிகிராபிகா இண்டிகா)