கிரந்த எழுத்துக் கல்வெட்டுகள்

தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை எழுதப் பயன்பட்ட எழுத்து கிரந்த எழுத்து என்பதாகும். ‘கிரந்தம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘நூல்’ என்று பொருள். சமஸ்கிருதப் படைப்புகளை எழுதப் பயன்பட்டதால் கிரந்தம் என்ற பெயர் இதற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியா முழுவதும் இவ்வெழுத்து பயன்பாட்டில் இருந்தது. மலையாள மொழி சமஸ்கிருதத்திலிருந்து நிறையச் சொற்களையும், இலக்கண மரபுகளையும் கடன் வாங்கியதால் கிரந்த எழுத்தும் மலையாள மொழி எழுத்தும் சேர்த்து கூட்டு எழுத்தாக ஏற்கப்பட்டு ’ஆரிய எழுத்து’ என்ற பெயரினைப் பெற்றது. இதுபோலவே துளுமொழி பேசும் பகுதிகளிலும் கிரந்த எழுத்து அம்மொழியை எழுதும் எழுத்தாகப் பயன்படுத்தப்பட்டது.

தற்கால எழுத்துக்களைப் பார்க்கும் போது கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் ஒன்று போலவே உள்ளமையைக் காணலாம். பிராமி எழுத்திலிருந்து இவ்விரு எழுத்துக்களும் வளர்ச்சி அடைந்த தன்மையும் ஒன்று போலவே அமைகின்றன. தமிழகத்தில் கிரந்த எழுத்தின் வளர்ச்சியை நான்கு கால கட்டங்களாகப் பகுக்கலாம். அவை தொன்மை மற்றும் அணி வேலைப்பாடு, மாறும் நிலை இடைக்காலம், தற்காலம் என்பவையாகும்.

கிரந்த எழுத்தில் அமைந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு

'பதிவாதி, நிதா’ என்ற பெயருடைய இசையாழினைக் குறிக்கும் கிரந்தக் கல்வெட்டு, கி.பி 7 ஆம் நூற்றாண்டு குடுமியான்மலை

கிரந்த எழுத்தில் அச்சான கல்வெட்டுப் புத்தகத்தின் ஒரு பக்கம்

‘வம்பு’, ‘வுகா’, ‘வீதாபு’ என மகேந்திரவர்மனின் பல்ல‘வ பட்டப் பெயர்களைச் சொல்லும் கிரந்தக் கல்வெட்டு, கி.பி 7 ஆம் நூற்றாண்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்

முத்தரையர்களின் கிரந்த எழுத்துக் கல்வெட்டு, கி.பி 9 ஆம் நூற்றாண்டு, செந்தலை, தஞ்சாவூர்

தற்காலக் கிரந்த எழுத்து

முதலாம் இராசராசசோழனின் (985-1012) தூண் கல்வெட்டு (பல துண்டுகளாக உடைந்தது) இராசராசசோழன் அகழ்வைப்பகம், தஞ்சாவூர் மாவட்டம்

‘குமார வ்யாகரணம்’ என்ற நூல் எழுதப்பட்ட 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓலைச்சுவடி

கால வரிசையில் கிரந்த எழுத்தின் பல்வேறு நிலைகள்

தொன்மை மற்றும் அணி வேலைப்பாடு மிகுந்த கிரந்த எழுத்துக்கள் பொதுவாகப் பல்லவ கிரந்தம் என அழைக்கப்படுகின்றன. மகேந்திரவர்மனின் திருச்சிராப்பள்ளி மற்றும் பிற குடைவரைக் கோயில் கல்வெட்டுகள், நரசிம்மவர்மனின் மாமல்லை, காஞ்சி கைலாசநாதர் கோயில், சாளுவன் குப்பம் கோயில் கல்வெட்டுகள், முத்தரையரின் செந்தலைக் கல்வெட்டுகள் ஆகியவை தொன்மை-அணிவேலை எழுத்துக்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.

இவை அழகாகவும் அணி வேலைப்பாடுடனும் ஆடம்பரமாகவும் உள்ளமையால் இவை அன்றாட வழக்கில் இருந்தவை அல்ல என்று கூறலாம். இவ்வகை நெளிவு, கழிவு எள்ள எழுத்துக்களை ஓலைகளில் எழுத இயலாது. மேலும் இவை கல்லில் எழுத மட்டுமே பயன்பட்டிருக்க வேண்டும்.

மாறும் நிலை கிரந்த எழுத்துக்களுக்கு சுமாரக கி.பி 650 முதல் 750 வரையிலான பிற்காலப் பல்லவர் (நந்திவர்மனின் காசக்குடி உதயேந்திரம் செப்பேடுகள்) பாண்டியன் நெடுஞ்சடையனின் ஆனை மலைக் கல்வெட்டுகள் எடுத்துக்காட்டுகளாகும். இடைக்காலக் கிரந்த எழுத்து வகை கி.பி. 950 முதல் கி.பி. 1250 வரையிலான சோழப் பேரரசின் கல்வெட்டுகளில் உள்ளவையாகும். தற்காலத்திய வகை பிற்காலப் பாண்டியர், விஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தியளையும் கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்தவையாகும்.

அச்சு இயந்திரங்கள் வந்த பிறகு சமஸ்கிருத நூல்கள் ஓலைச்சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட போதும் கிரந்த எழுத்துக்களிலேயே அச்சிடப்பட்டன. இந்தியா சுதந்திரமடைந்த பின் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட ஹிந்தி மொழி முக்கியத்துவம் பெற்றதால் தேவநாகரி எழுத்திலேயே தமிழகத்தில் சமஸ்கிருத மொழிப் படைப்புகளும் அச்சேறின. எனவே, கிரந்த எழுத்துக்கள் வழக்கொழிந்தன.