செப்பேடுகள்-கல்வெட்டுகள்

கற்களில் ஆவணங்கள் பொறிக்கப்பட்டது போல செம்பு, வெள்ளி, தங்கத் தகடுகளிலும் ஆவணங்கள் பதியப்பட்டுக் கிடைத்துள்ளன. உரிமை தொடர்பான பிணக்குகள் ஏற்படும் போது உரிமை உடையவர் ஆதாரமாக எடுத்துச் சென்று காட்டுவதற்காக உலோகங்களில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கற்களில் பொறிக்கப்பட்ட ஆவணங்கள் எடுத்துச் செல்லும் வசதி இல்லாததால் இவ்வகை எடுத்துச் செல்லும் ஆவணங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பல கல்வெட்டுகளில் ஆவணங்கள் குறிப்பிடும் போது ‘கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க’ என்ற சொற்றொடர் காணப்படுவது குறிப்பிடப்படுகிறது. செப்பேடுகளின் உரிமையாளர்கள் இறக்கும் போதும், நாடுவிட்டு ஓடிப்போகும் போதும், உரிமைகள் இழக்கும் போதும், போர் இயற்கைச் சீற்றங்கள் காரணமாகவும் இவை மதிப்பிழந்து விடுகின்றன.

தேவையற்றவையானவைகளாக இருந்த இவை பிற்காலங்களில் தற்செயலாக மண்னைத் தோண்டும் போது புதையல்களாகக் கிடைக்கின்றன. இவ்வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் பள்ளன் கோயிலில் நிலத்தடியில் கிடைத்த செப்பேடு தமிழகச் செப்பேடுகளில் தொன்மையானதாகும். இது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றம் சமணர் தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் சேவூர் செப்பேடு, கி.பி. 17 ஆம் நூற்றாண்டு, விழுப்புரம் மாவட்டம்

திருமலை நாயக்கர் காலச் செப்பேடு, கி.பி. 17 ஆம் நூற்றாண்டு, மதுரை மாவட்டம்

திருமலை நாயக்கர் காலச் செப்பேடு, கி.பி. 17 ஆம் நூற்றாண்டு, மதுரை மாவட்டம்

தொடக்க காலச் செப்பேடுகளின் அமைப்பு ஓலைச்சுவடிகளைப் போன்று ஒன்றுக்கு மேற்பட்ட தகடுகளில் நீளவாக்கில் எழுதப்பட்டு கோர்க்கப்பட்டவையாகும். துளைகளில் கோர்க்கப்பட்ட வளையம் சேருமிடம் முத்திரை இட்டு சேர்க்கப்பட்டுள்ளமை இச்செப்பேடுகளில் எழுதப்பட்ட ஆவணத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதாகும். பிற்காலத்தில் இம்முறை மாறுட்டு ஒரு தகட்டில் மட்டும் எழுதும் மரபு உண்டாகியது.

பல்லவர்கள் (கி.பி. 600 – 900) பொதுவாக செப்பேடுகளை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு பகுதிகளாக அமைத்தனர். தமிழ்ப் பகுதி தமிழ் எழுத்திலும் சமஸ்கிருதப் பகுதி கிரந்த எழுத்திலும் பதியப்பட்டுள்ளது. பல்லவர்களின் சமகாலத்தவராகத் தமிழகத்தின் தென் பகுதியில் ஆட்சி புரிந்த பாண்டியர்கள் (கி.பி. 700 – 1000) இதே முறையில் தமிழ்-சமஸ்கிருதம் என இருபகுதிகளாகச் செப்பேடுகளை பொறித்த போதிலும் தமிழ்ப் பகுதி வட்டெழுத்திலும் சமஸ்கிருதப் பகுதி கிரந்த எழுத்திலும் இருந்தது. தென் பகுதியில் ஆய்குல மன்னன் வரகுணனின் (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) செப்பேடு சமஸ்கிருதம் கிரந்தத்திற்குப் பதிலாக நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜயநகர காலச் செப்பேடுகளில் சமஸ்கிருதம் நந்தி நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டது.