தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள்

தமிழ்- பிராமி எழுத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை வட்டார வேறுபாடுகளுடன் தொடர்ந்து வழக்கில் இருந்தது. இக்கால கட்டத்தில் தமிழகத்தில் சமஸ்கிருத்தினை எழுத பல்லவர்களால் கிரந்த எழுத்து பெரு வழக்கிற்கும் கொண்டு வரப்பட்டது. இந்நிலை இரண்டு நூற்றாண்டுகளுக்கு அதாவது கி.பி 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. கி.பி 7 ஆம் நூற்றாண்டளவில் தமிழ் எழுத்து கிரந்த எழுத்திலிருந்து தோற்றம் கண்டது.

தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் காணப்படுகின்றன. தமிழ் எழுத்திலான கல்வெட்டுகள் கி.பி 11 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை தமிழகத்தின் வடபகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. தென்பகுதியில் அதாவது பாண்டிய நாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்தது. எனினும் சோழர்கள் பாண்டிய நாட்டினை 10 ஆம் நூற்றாண்டு இறுதியில் வெற்றிகண்டு கையகப்படுத்தியதும் பாண்டிய நாட்டிலும் தமிழ் வழக்கத்திற்கு வந்தது. அதன் பிறகு தமிழ் எழுத்து தமிழகம் முழுவதுமாக பயன்படலாயிற்று.

கர்நாடகத்தில் ஒரு பகுதியிலும் ஆந்திரத்தில் நெல்லூர் மாவட்டம் வரையிலும் நமக்குத் தமிழ் எழுத்தாலான கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம், ஒரிசா மாநிலத்தில் பூரி மற்றும் பிற இடங்களில்  உதிரிகளாக சில தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

காலப்போக்கில் தமிழ் எழுத்து

சீனநாட்டில் தமிழ் மற்றும் சீன மொழியில் உள்ள இருமொழிக் கல்வெட்டு, காலம் சக வருடம் 1203 (கி.பி. 1281). சீனப் பேரரசன் செகைகான்பர்மனின் நலத்திற்கான சம்பந்தப் பெருமாள் என்பவன் திருக்கானிச்சுரமுடையார் என்று தெய்வத்தை எழுந்தருளிச் செய்தமையைக் குறிக்கிறது.

கடல் கடந்த நாடுகளான இலங்கை, மியன்மார், தாய்லாந்து மற்றும் சீனம் ஆகிய நாடுகளிலும் தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. தொடக்காலத் தமிழ் எழுத்தமைதியை நாம் கவனித்தால் தமிழ் எழுத்துக்களும் கிரந்த எழுத்துகளைச் சார்ந்து அவை ஒப்பவே வளர்ச்சி பெற்றன என்பதை ஊகிக்க முடியும், தமிழ் எழுத்தின் வளர்ச்சியை மேலோட்டமாக நாம் மூன்று கால கட்டங்களாகப் பகுக்க இயலும். அவை தொன்மையான எழுத்துகள், இடைக்கால எழுத்துகள், பிற்கால எழுத்துகள் என்ற மூன்று வகையாகும்.