நாகரி எழுத்துக் கல்வெட்டுகள்

‘நாகரி’ என்ற பெயர் ‘நகரம்’ எனப்பட்ட பாடலிபுத்திரத்தின் (இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா) அடிப்படையில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும், எனினும் நகரத்தார் எனப்பட்ட வணிகர்கள் அதிகம் பயன்படுத்தியதின் காரணமாக நாகரி என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுவர். நாகரி எழுத்தில் நந்திநாகரி, தேவநாகரி என இருவகை எழுத்துக்கள் சமஸ்கிருதத்தை எழுதப் பயன்படுவையாக இருந்தன. விஜய நகரர் காலச் செப்பேடுகள் பலவும் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன.

மாமல்லை, சாளுவன் குப்பம், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகிய இடங்களில் இராஜசிம்ம பல்லவன் காலத்தில் பொறிக்கப்பட்ட நாகரி எழுத்துக் கல்வெட்டுகளே தமிழகத்தில் கிடைக்கும் தொன்மையான நாகரி எழுத்துக் கல்வெட்டுகளாகும். செப்பேடுகளில் தொன்மையான நாகரி எழுத்துச் செப்பேடு ஆய்குல மன்னனான கருணன் தடக்கன் (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) வெளியிட்ட செப்பேடாகும்.

சோழர்களில் முதலாம் இராஜராஜன், முதலாம் இராசேந்திரன் ஆகியோர் வெளியிட்ட காசுகள் நாகரி எழுத்தில் வெளியிடப்பட்டவையாகும். விஜய நகரர், தஞ்சை நாயக்கர் காசுகள் பலவும் நாகரி எழுத்தால் ஆன பெயர்களைக் கொண்டுள்ளன. போன்ஸ்லே மன்னர்களின் வரலாறு முழுவதும் தஞ்சை மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜியின் ஆணைக்கிணங்கத் தஞ்சைப் பெரிய கோயில் சுவரில் நாகரி எழுத்தில் கல்வெட்டாகப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நரசிம்ம பல்லவனின் நாகரி எழுத்துக் கல்வெட்டு, கி.பி. 8 ஆம் நூற்றாண்டு, சாளுவன் குப்பம், மாமல்லபுரம்

பின்பக்கம்

முன்பக்கம்

பின்பக்கம் நாகரி எழுத்தில் ராஜராஜ என்றுள்ள முதலாம் இராஜராஜனின் (கி.பி. 985-1012) காசு

‘ஸ்ரீ கிருஷ்ணராய’ என்று நாகரி எழுத்தில் உள்ளன. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் (கி.பி. 1509-1520) காசு