ஆலம்பறை கோட்டை
வரலாற்றுச் செய்திகள்
வங்கக் கடற்கரையில் கடல் அலைகளை வருடியபடி கரையின் வெகு அருகாமையில் மிக இயற்கையான சூழலில் ஆலம்பறை கோட்டை காணப்படுகிறது. இக்கோட்டை கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முகலாய அரசால் கட்டப்பட்டதாக தெரிய வருகிறது. கி.பி. 1735-ல் இது நவாப் தோஸ்து அலிகானின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. பிரெஞ்சு தளபதியான புகழ்பெற்ற டுப்ளே தனக்களித்த உதவியைப் பாராட்டி இக்கோட்டையைத் தக்காணச் சுபேதார் முஸாபர்ஜங், பிரெஞ்சுகாரருக்கு கி.பி. 1750-ல் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். பிரெஞ்சு ஆட்சியின் வலிமை தளர்ந்த போது ஆங்கில தளபதி கி.பி. 1760-ல் இக்கோட்டையைக் கைப்பற்றி இதைத் தகர்த்திருக்கிரார்.
தற்போது கோட்டையின் சிதைந்த பகுதி மட்டுமே காணப்படுகிறது. இது பரந்து விரிந்த பரப்பில் முழுதும் செங்கந்களால் கட்டப்பட்ட கோட்டையாகும். கோட்டையின் சுவர்களும், கொத்தளங்களும் படையெடுப்பாலும் கடற்காற்றின் வேகத்திற்கு ஈடு
கொடுக்க முடியாமலும் கால வெள்ளத்தில் முற்றிலும் சிதைந்து, உடைந்த சுவர்கள் மட்டுமே எஞ்சி நிற்க காண்கிறோம். கோட்டை நுழைவாயிலின் அருகே இருபுறங்களிலும் படிக்கட்டுகள் காணப்படுகின்றன. கோட்டையின் இடபுறம் அடர்த்தியான கடல் மணலால் நிறைந்து காணப்படுகிறது.
அமைவிடம்: சென்னை - பாண்டி கிழக்கு கடற்கறை சாலையில் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கடப்பாக்கத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது.
வட்டம் : மதுராந்தகம்
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 11049கல்வி/நாள்/17.06.78