சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில் - திருப்பருத்திக்குன்றம்
வரலாற்றுச் செய்திகள்
திருப்பருத்திக் குன்றத்திலுள்ள சந்திரப்பிரபா தீர்த்தங்கரர் கோயில் பல்லவப் பேராட்சியின் போது தோற்றுவிக்கப்பட்டதாகும். பல்லவ மன்னனாகிய இராஜசிம்மன் காலத்தில் (கி.பி. 690-728) இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என அறியப்படுகிறது.
இது கி.பி. 8-ஆம் நூற்றாண்டிற்குறிய கட்டட கலையம்சங்களை ஆங்காங்கே கொண்டு விளங்கும் இக்கோயில் இராஜசிம்மன் கலைப்பாணியைதான் பெற்று விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. சந்திரநாதர் கோயில் கருவறை, அந்தராளம், முன்மண்டபம், அதனுடன் இணைந்த உள்திருச்சுற்றாலை ஆகியப் பகுதிகளைக் கொண்டதாகும். இவற்றுள் உள்சுற்றாலையைத் தவிர பிற பகுதிகளில் சுவர்கள் அதிக திண்மை உடையவை. கருவறையின் புறச்சுவர்களில் குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு மாடம் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.ஆனால் இவற்றில் சிற்பங்கள் எவையும் செதுக்கப்படவில்லை.
கருவரையின் சுவற்றில் அரைத் தூண்களால் அலங்கரிக்கின்றன. இந்த தூண்களுள் குறிப்பாக சுவரின் மூலைகளிலுள்ள அரைத்தூண் கீழ்ப்பகுதியில் முன் கால்களைத் தூக்கிய யாழிச் சிற்பங்கள் நின்ற நிலையில் இடம் பெற்றிருக்கின்றன.
இராஜசிம்ம பல்லவன் கட்டியக் கட்டடக் கோயில்கள் அணைத்திலும் இந்த தனித்தன்மையினைக் காணலாம். கோயிலின் கூரையில் நீண்ட வாஜக்கற்கள் பயன்படுத்ப்பட்டிருக்கின்றன. இவற்றின் வெளிப்பகுதி கொடுங்கையாக சிறிது வெளியில் நீட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் இவற்றில் வழக்கமாகக் காணப்பெறும் கூடு அமைப்புகள் இல்லை. திருச்சுற்றாலைச் சுவரின் அடித்தளத்தில் ஒரு வரிசை மட்டிலும் கருங்கல்லாலும், பிறப்பகுதிகள் மணற் கல்லாலும் (Sand Stone) கட்டப்பட்டிருக்கின்றன. பல்லவர் காலத்துக் கட்டடக் கோயில்கள் பெரும்பாலானவற்றில் இப்பொதுத் தன்மையினைக் காணலாம்.
அமைவிடம் : சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் உள்ளது.
வட்டம் : காஞ்சிபுரம்
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 118/த.வ.ப.துறை/நாள்/22.06.90