தரங்கம்பாடி

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு வட்டத்தில் கிழக்கு கடற்கரையில் துறைமுகப்பட்டினமாக தரங்கம்பாடி திகழ்ந்துள்ளது. உப்பனாறு என்று அழைக்கப்படும் பொறையாறு, தரங்கம்பாடி கோட்டையின் தென் பகுதியில் வங்கக்கடலுடன் கலக்கிறது.

இக்கோட்டை தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரிடம் டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன் செய்து கொண்ட வணிக ஒப்பந்தத்தின்படி 1620-ல் டேனிஷ் கப்பல் படைத்தலைவர் ஓவ் ஜெட்டி என்பவரால் கடற்கரை அருகில் கட்டப்பட்டது. தங்கத்தினால் செய்யப்பட்ட ஏட்டில் எழுதப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் தரங்கம்பாடி கோட்டையை கட்டுவதற்கும், வரி வசூல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இப்பெருமை வாய்ந்த டேனிஷ் கோட்டையினை 2008 மார்ச் மாதம் டேனிஷ் அரசானது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து அகழாய்வு செய்தது. கோட்டையின் முன்பகுதியில் ஐந்து குழிகள் அமைக்கப்பட்டன. இக்கோட்டை அகழியின் மட்டம் வரை அகழாய்வு செய்யப்பட்டது. அகழியின் வெளிப்பக்கம் பெரிய மதில் சுவர் மற்றும் அகழியை கடந்து செல்வதற்கு மூன்று செங்கல் மேடைகளும், நுழைவாயிலை ஒட்டி செங்கல்லால் ஆன நடைபாதையும், அகழியில் உள்ள கல்மேடைகளை இணைப்பதற்கு மூடி திறக்கும் வகையில் மரப்பாலமும் இருந்தமை அகழாய்வில் கண்டறியப்பட்டன. அகழியின் அகலம் சுமார் 24 மீட்டர் ஆகும். இவ்வகழாய்வில் சீனமட்பாண்டங்கள், டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட புகைப்பான்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.