தெலுங்கு எழுத்துக் கல்வெட்டுகள்

தொல்லெழுத்தியலார் மற்றும் மொழி இயலாரின் கருத்துப்படி தொன்மையான தெலுங்கு எழுத்து தெலுங்குச் சோழன் காடமல்லன் வெளியிட்ட செப்பேட்டில் உள்ளதாகும். இம்மன்னன் வடதிசை வெற்றிப் புகழ் பெற்ற, கரிகாலச் சோழனின் வழி மரபினனானத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறான். தமிழகத்தில் தெலுங்குக் கல்வெட்டுகள் குறிப்பிடும் அளவுள்ளன.

மதுரை நாயக்கர்களில் இராணிமங்கம்மாள் சொக்கநாத நாயக்கர், புதுக்கோட்டை தொண்டைமான்கள் ஆகியோரின் செப்பேடுகள் தெலுங்கு எழுத்தில் உள்ளன. இவர்கள் வெளியிட்ட காசுகளிலும் தெலுங்கு எழுத்தில் பெயர்கள் உள்ளன. விஜயநகர மன்னர்களின் கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டுச் செப்பேடுகளின் இறுதியில் அரசனுடைய கையொப்பம் அல்லது முத்திரை தெலுங்கு எழுத்தில் உள்ளது. எடுத்துக்காட்டாக ‘விருபாக்ஷ’ என்றுள்ளதைச் சொல்லலாம்.

நாயக்கர் கால (கி.பி. 16-18 ஆம் நூற்றாண்டு) சுவர் ஓவியங்களில் காணப்படும் காட்சிகளுக்கான விளக்கங்கள் தெலுங்கில் உள்ளன. நாயக்கர் ஆட்சியின் தாக்கம் காரணமாக தமிழ் மரபு வழியுடையச் சிற்றரசுகளும் தமிழுடன் தெலுங்கினை அவர்களது ஆவணங்களிலும் கடிதங்களிலும் பயன்படுத்தியுள்ளனர்.

பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியினர், தென்னகத்தை ஆளத் தொடங்கிய போது அவர்களது கருவூல முத்திரைகளில் தமிழ், பாரசீகம், ஆங்கிலம் ஆகியவற்றுடன் தெலுங்கினையும் பயன்படுத்தியுள்ளதைக் காண்கிறோம்.

கோயிலுக்கு கொடைதரப்பட்ட நிலத்தினைக் குறிப்பிடும் தெலுங்கு மொழிக் கல்வெட்டு, கி.பி. 17 ஆம் நூற்றாண்டு, காஞ்சிபுரம் மாவட்டம்

சுவரோவியத்தில் தெலுங்கு எழுத்தில் விளக்கங்கள், கி.பி. 17 ஆம் நூற்றாண்டு, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

தமிழ்-தெலுங்கு ஆகிய இருமொழி – இரு எழுத்துக்களில் உள்ள கல்வெட்டு, கி.பி. 1765 நாகப்பட்டினம் மாவட்டம்