வட்டெழுத்துக் கல்வெட்டுகள்
வட்டமான கோடுகளைக் கொண்டு இவ்வெழுத்து எழுதப்பட்டதால் இவ்வெழுத்து வட்டெழுத்து என்றும் வட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வட்டம் என்ற பெயர் குற்றாலத்தில் உள்ள கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் காணப்படுகிறது. கேரளத்தில் இதனை நாநாமோன், தெக்கன் மலையாளம் என்றும் பெயரிட்டழைப்பர். இவ்வெழுத்திலான தொன்மையான கல்வெட்டுகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகுதியாக காணப்படுகின்றன. தஞ்சை மற்றும் காவேரி ஆற்றங்கரைப் பகுதியான முந்தைய சோழ மண்டலத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இதுவரை அறியப்படவில்லை.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆசிரியர்கள், மாணவர்கள், தொல்லியல் ஆர்வலர்களுக்கு நடத்திய சிறப்பு பயிற்சிகள் காரணமாக மிக முக்கியமான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு அவற்றில் குறிப்பிடத்தக்கவை, தமிழகத்தின் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கிடைத்திடும் நடுகல் கல்வெட்டுகளும் ஆகும். இப்புதிய கண்டுபிடிப்புகள் தொல்லெழுத்தியலார் வட்டெழுத்தின் வளர்ச்சியை முழுமையாக அறிந்திட உதவியாக உள்ளன.